பதிவு செய்த நாள்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண், காதலனால் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு உடல் கைப்பற்றப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த பட்டுராஜா மகள் சசிகலா, 24. கோதவாடியிலுள்ள, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த அக்., 24 ம் தேதி வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து, பட்டுராஜா பொள்ளாச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், உடன் வேலை பார்த்த ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த வினோத்,26, என்பவரை சசிகலா காதலித்து வந்ததும், இவர் காணாமல் போன நாள் முதல் காதலனும், தலைமறைவானதும் தெரிய வந்தது. சந்தேகமடைந்த போலீசார், தலைமறைவான வினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவையில் சுற்றித்திரிந்த வினோத், போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சசிகலாவை கொலை செய்து, ஈச்சனாரி பை-பாஸ் ரோடு பகுதியில் புதைத்தது, தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஒரே இடத்தில் பணிபுரிந்த, வினோத், சசிகலா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து இருக்கின்றனர். இடையில் வினோத், வேறு வேலைக்கு சென்றுவிட்டார். ஒரு கட்டத்தில், சசிகலாவிடம் வினோத் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த அக்., 24ம் தேதி, அவரை காரில் அழைத்துச்சென்ற வினோத், திரும்ப திருமணம் பற்றி பேசியுள்ளார். சசிகலா சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த வினோத் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்துள்ளார். பின், அவரது கழுத்தை நெரித்து கொன்று விட்டு, உடலை, ஈச்சனாரி பை-பாஸ் ரோட்டில், முட்புதர்களுக்கு இடையே உள்ள குழியில் தள்ளி புதைத்து விட்டார். பின் தலைமறைவாகி, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த வினோத், கோவை வந்த போது, மொபைல் போன் சிக்னல் உதவியால் பிடிபட்டார். வினோத் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து, அழுகிய நிலையில், சசிகலாவின் உடல் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
--
No comments:
Post a Comment