சிறுவயதில் பாலியல் தொல்லைக்குள்ளானேன் - ரவிசங்கர் மகள் அனோஷ்கா
டெல்லி: சிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்குள்ளானேன் என்று கூறியுள்ளார் மறைந்த சிதார் மேதை ரவிசங்கரின் மகள் அனோஷ்கா.
உலக பெண்கள் உரிமைப் பிரசார இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார் அனோஷ்கா. அதில்தான் இந்த பரபரப்புத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது குடும்ப நண்பர் ஒருவரால் தான் சிறுமியாக இருக்கும்போது பலமுறை பாலியல் ரீதியான தொல்லைகளுக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த எண்ணத்தில்தான் எனது ஆதரவைத் தெரிவிக்க முன்வந்தேன்.
எனது இந்த ஆதரவுச் செய்தியை, டெல்லியில் டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகாயமடைந்து பின்னர் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு சமர்ப்பிக்கிறேன்.
நானும் கூட சிறு வயதில், சிறுமியாக இருந்தபோது பாலியல் தொல்லைக்குள்ளாவள்தான். பல ஆண்டுகள் எனது குடும்ப நண்பர் ஒருவரால் நான் பாலியல் தொல்லைக்குள்ளானேன். அவர் மீது எனது குடும்பத்தினர், எனது பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அதை அவர் மீறி நடந்து கொண்டார்.
எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட தொல்லைகளில் சிக்க நேரிடும் என்பதை பின்னர் உணர்ந்தேன். அந்தரங்கப் பகுதிகளில் தொடுவது, தடவுவது, கிள்ளுவது, வார்த்தைகளில் ஆபாசம் கலந்து பேசுவது போன்றவை பெண்களுக்கு எதிராக பெருமளவில் நடைபெறும் வக்கிரச் செயல்களாகும். அப்போது இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. எனவே என்னால் எதிர்க்க முடியவில்லை.
இப்போது நான் வளர்ந்து விட்டேன். கடந்த காலத்தை மறந்து விட முயல்கிறேன். இப்போது பாலியல் வன்முறைகள் குறித்து நன்றாக தெரிகிறது. எனவே அதற்கு எதிராக குரல் கொடுக்கிறேன். என்னைப் போல அத்தனை பெண்களும் கிளர்ந்தெழ வேண்டும். இந்தியப் பெண்கள் அனைவருக்கும் ஆதரவாக நான் இருக்கிறேன் என்றார் அனோஷ்கா.
அனோஷ்காவும் சிதார் கலைஞர்தான். அமெரிக்காவில் பிறந்த இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
Story first published: Thursday, February 14, 2013, 14:50 [IST]
No comments:
Post a Comment