தர்மபுரி, ஜூலை. 30–
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள் கேட்டூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தானத்தின் மகள் ராஜேஸ்வரி (வயது22). இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த ராமமூர்த்தி நகரை சேர்ந்த பச்சமுத்து மகன் பாலமுருகனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 15–ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 3 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
சில நாட்கள் மட்டுமே மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியது. 7 பவுன் நகையை வாங்கி வருமாறு கூறி அவரது மாமனார் பச்சமுத்து, மாமியார் பழனியம்மாள், மாமனாரின் தந்தை ராமபதி ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு 7–30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாக்கு மூலம் பெற வருமாறு அவர்களை ராஜேஸ்வரியின் உறவினர்கள் அழைத்த போது அவர்கள் வரவில்லை .இதனால் ராஜேஸ்வரியின் வாக்குமூலத்தை உறவினர்கள் செல்போனில் பதிவு செய்தனர்.
இதுகுறித்து ராஜேஸ்வரியின் உறவினர்கள் கூறியதாவது:–
ராஜேஸ்வரி தீயில் கருகி சிகிச்சை பெற்ற போது அவரால் பேச முடியவில்லை. இதனால் மாஜிஸ்திரேட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தும் வாக்கு மூலம் பெற முடியவில்லை. அவர் திரும்பிச்சென்று விட்டார்.
நேற்று காலை ராஜேஸ்வரி நன்றாக பேசினார். 9 மணி முதல் பலமுறை தீவட்டிப் பட்டி போலீசாரை தொடர்பு கொண்டும் அவர்கள் வாக்கு மூலம் வாங்க வரவில்லை. இதனால் மாலை 4–30 மணிக்கு சேலம் நெத்தி மேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நாங்கள் நேரில் சென்று இது பற்றி தெரிவித்தோம். அதன் பிறகும் போலீசார் வரவில்லை. இதனால் நாங்கள் ராஜேஸ்வரியின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்து உள்ளோம்.
அவரது மாமனார் பச்சமுத்து, மாமியார் பழனியம்மாள். மாமனாரின் தந்தையான முதியவர் ராமபதி ஆகியோர் 7 பவுன் நகை கேட்டு ராஜேஸ்வரியை கொடுமைப்படுத்தி உள்ளனர். ஆனால் அவர் நகை வாங்கி வர முடியாது என்று கூறி விட்டார். இதனால் அவரது மாமியார் மண்எண்ணை கேனை ராஜேசுவரியிடம் கொடுத்து 'நீ இருப்பதை காட்டிலும் தீக்குளித்து சாவதே மேல் என்று கூறினார்'. இதனால் ராஜேஸ்வரி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சாவுக்கு நீதி வேண்டும். அவரை தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ராஜேஸ்வரி தற்கொலை தொடர்பாக மேட்டூர் ஆர்.டி.ஓ. சந்திரன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினார். தீவட்டிப்பட்டி போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://www.maalaimalar.com/2013/07/30181448/dharmapuri-dowry-harassment-ne.html
No comments:
Post a Comment