சேந்தமங்கலம், செப். 9–
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த தேவராயபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார் (32). இவரது காதல் மனைவி அம்பிகா (25). கடந்த 4–ந் தேதி இரவு இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை சிவகுமாரின் அண்ணன் மனைவி கிருஷ்ணவேணி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனக்கும் எனது கணவர் நடராஜனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது கணவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இல்லாததால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் எங்களுக்கும் குழந்தை இல்லை. மருத்துவ பரிசோதனையில் எனது கணவர் நடராஜனுக்கு ஆண்மை இல்லாதது தெரியவந்தது.
இந்த நிலையில் எனது கணவரின் தம்பி உறவு முறையில் இருந்த சிவகுமார் என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சிவகுமாரும், அம்பிகாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணமாகியும் அம்பிகா தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிவக்குமாருக்கும், எனக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தற்போது எனது தாயார் வீட்டில் தங்கி பள்ளிக்கூடம் சென்று வருகிறான். எனது கணவர் நடராஜன், அந்த குழந்தை சிவக்குமாருக்கு பிறந்தது தானே, இனி உனக்கும், எனக்கும் ஒத்து வராது என்று கூறி கடந்த 1 ஆண்டுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து தேவராயபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தேன். அப்போது நான் சிவகுமார் தான் எனது கணவர் என்று வீட்டு உரிமையாளரிடம் சொல்லி இருந்தேன். சிவகுமார் அடிக்கடி வராததால் வீட்டு உரிமையாளர் என்னை வீட்டை காலி செய்ய சொன்னார்கள்.
எனது கணவர் நடராஜன் எனக்கு 3 சென்ட் நிலம் கொடுத்து இருந்தார். என்னை விட்டு பிரிந்து சென்றதால் நான் விவாகரத்து கேட்டு இருந்தேன். இதையடுத்து அவர் அந்த நிலத்தை என்னிடம் இருந்து திருப்பி கேட்டார். அந்த நிலத்தை ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை ஒப்பந்தம் செய்து பணத்தை வாங்கி ரூ. 3 லட்சத்தை எனது கணவர் நடராஜனிடம் கொடுத்து விட்டேன். பின்னர் மீதியுள்ள ரூ. 1 லட்சத்தில் எருமப்பட்டி பஸ்நிறுத்தத்தில் ஓட்டல் கடை வைத்தேன். அங்கும் சிவகுமாரை தான் கணவர் என்று கூறியிருந்தேன். எனது வாழ்க்கை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு தூக்கம் வராது. அப்போதெல்லாம் நான் தூக்க மாத்திரை சாப்பிடுவேன்.
இந்த நிலையில் சிவகுமாரின் மனைவி அம்பிகா தனது அம்மா வீட்டில் இருந்து அழைத்து செல்லுமாறு சிவகுமாரிடம் கூறுவதாக அவர் தெரிவித்தார். கபிலர்மலையை சேர்ந்த ஒருவர் சிவகுமார் வீட்டில் சமாதானம் பேசி 5.9.2013 அன்று அம்பிகாவை சிவகுமார் வீட்டிற்கு அழைத்து வருவதாக கூறியிருந்தனர். அதற்காக 2–ந் தேதி அன்று அம்பிகாவை சிவகுமார் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். அப்போது அம்பிகாவை எங்களுடனே வாடகை வீட்டில் தங்க வைத்தோம். சிவகுமார் அம்பிகாவுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டால் என்னை பார்க்க வரமாட்டார். வீட்டின் உரிமையாளரும், கடையின் உரிமையாளரும் காலி செய்ய சொல்லிவிடுவார்கள் என்று நினைத்தேன். மேலும் எனது பெற்றோர் வீட்டிலும் எனக்கு ஆதரவு இல்லை.
இதற்கு மேல் வாழ்க்கையில் என்ன செய்வது என்று எனக்கு பயம் வந்து விட்டது. இதனால் சிவகுமார் என்னுடனே இருக்க வேண்டும் என்று யோசித்தேன். அம்பிகா இருந்தால் தானே சிவகுமார் என்னை விட்டு போவார். எனவே அம்பிகாவை தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முடிவுசெய்தேன். 4–ந் தேதி நானும் சிவகுமார், அம்பிகா ஆகியோர் ஓட்டல் கடையில் இருந்து வீட்டிற்கு போனோம். நான் 3 பேருக்கும் டீ போட்டேன்.
அப்போது நான் ஏற்கனவே முடிவு செய்த படி தூக்க மாத்திரையை டீயில் கலந்து சர்க்கரையை அதிகமாக போட்டு அதை அம்பிகாவுக்கு கொடுத்தேன். பின்னர் சிவகுமார் வெளியே சென்று விட்டார். நானும் கடைக்கு வந்து விட்டேன். இரவு 7 மணியளவில் அம்பிகா மயக்கம் அடைந்து விட்டாளா என்று சென்று பார்த்தேன். அப்போது அம்பிகா வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தாள். அதனால் நான் வீட்டிற்குள் சென்று தயாராக இருந்தேன்.
சிறிது நேரம் கழித்து அம்பிகா கயிற்று கட்டிலில் வந்து படுத்து கொண்டாள். அப்போது அவள் அரைமயக்கத்தில் இருந்தாள். அப்போது நான் அவளது துப்பட்டாவை எடுத்து சுருட்டி அவளது கழுத்தில் இறுக்கி கொலை செய்தேன். பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு சென்று விட்டேன். இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டுற்கு வந்து அவள் இறந்து விட்டாளா என்று உறுதி செய்ய பக்கத்து கடையில் வேலைப்பார்க்கும் சிறுவனிடம் அம்பிகா உடல் நிலை சரியில்லாமல் இருந்தாள் வா போய் பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்து சென்றேன்.
அப்போது அம்பிகா அசைவின்றி கிடப்பதை பார்த்து அவள் இறந்து விட்டதை உறுதி செய்து சிவகுமாருக்கு போன் செய்து அம்பிகா அசைவின்றி கிடப்பதாக கூறினேன். இதையடுத்து சிவகுமார் வீட்டிற்கு வந்து பார்த்து தண்ணீர் தெளித்தார். அப்போது அம்பிகா இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அம்பிகாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இந்த நிலையில் அம்பிகாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிடித்தால் அடித்து விடுவார்கள் என்று பயந்து அம்பிகாவை கொலை செய்ததை ஒத்துக்கொண்டு சரண் அடைந்தேன். பின்னர் போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் கிருஷ்ணவேணி கூறியிருந்தார்.
http://www.maalaimalar.com/2013/09/09135103/namakkal-near-Sister-in-law-yo.html
No comments:
Post a Comment